சிபிஎஸ்இ தேர்வை இனிமேல் புத்தகத்தை பார்த்து எழுதலாம்: விரைவில் சோதனை முயற்சி
- அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.
- 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பரிசோதனை முறையில் அனுமதி.
9 முதல் 12-ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில் ஓபிசி (Open Book Examinations) திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த செய்தியை ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் ராம சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
"இந்த தகவல் சரியானதுதான். இந்த முடிவு 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. சோதனை பயிற்சி விரைவில் தொடங்கப்படும். முழு விவரம் சிபிஎஸ்இ இணைய தளத்தின் curriculum committee minutes என்பதில் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 11 முதல் 12-ம் வகுப்புகளுகளுக்கு உயிரியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் பரிசோதனை முயற்சி அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.
பாடப்புத்தகம், படிப்பு தொடர்பான பொருட்கள் அல்லது குறிப்புகள் அடங்கியவை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். புத்தகம் இல்லாமல் தேர்வு எழுதுவதை விட, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவது எளிதாக இருக்காது எனக் கூறப்படுகிறது.
இது மாணவர்களின் நினைவாற்றலை பகுப்பாய்வு செய்யாது. அதேவேளையில் ஒரு விஷயத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் மற்றும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.