பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வைத்த 7 முக்கிய கோரிக்கை
- ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும்.
- கோரிக்கைகளை கட்டாயம் மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் மோடியை 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
அப்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் 7 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும்.
போல வரம் திட்ட கட்டுமானத்திற்கும், தலைநகர் அமராவதியில் அரசு வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு விரிவான நிதி உதவி வழங்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
சாலைகள், பாலங்கள் போன்ற அரசு அவசர துறைகளை கருத்தில் கொண்டு மூலதன செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்ற சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
துகராஜப்பட்டினம் துறைமுகம் போன்ற பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்தார்.
இந்த கோரிக்கைகளை கட்டாயம் மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
பின்னர் மத்திய மந்திரிகள் நித்தின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா, பியூஸ் கோயல் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.
இன்று மாலை டெல்லியில் இருந்து சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்புகிறார்.