அனுமன் படத்திற்கு முன்னால் போஸ் கொடுத்த பெண் பாடி பில்டர்கள்: காங்கிரஸ்-பா.ஜ.க. மோதல்
- போட்டி நடக்கும் இடத்தின் முன்னால் அனுமன் உருவப்படம் இருந்துள்ளது.
- அனுமன் படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரத்லம்:
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் 13-வது மிஸ்டர் ஜூனியர் உடல் கட்டமைப்பு போட்டி (பாடிபில்டிங்) கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெற்றது.
இதில் பெண் பாடிபில்டர்கள் பங்கேற்றனர். அப்போது போட்டி நடக்கும் இடத்தின் முன்னால் அனுமன் உருவப்படம் இருந்துள்ளது. அந்த படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பிரம்மச்சரிய கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியதோடு, போட்டி நடந்த இடத்தில் நேற்று கங்கை நதி நீர் தெளித்து அனுமன் மந்திரங்கள் ஓதினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயங்க் ஜாட் கூறுகையில், இதில் ஈடுபட்டவர்களை அனுமன் தண்டிப்பார் என்றார்.
அதே நேரத்தில் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிதேஸ் பாஜ்பாய் கூறுகையில், பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பதிலடி கொடுத்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ்காரர்கள் பெண்கள் மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் அல்லது நீச்சல் ஆகியவற்றில் பங்கேற்பதை பார்க்க முடியாது. அவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பெண்களை அழுக்கான கண்களுடன் பார்க்கிறார்கள் என்றார்.