முரண்டு பிடிக்கும் ஷிண்டே.. டெல்லி விரைந்த பட்னாவிஸ் - களத்தில் குதிக்கும் அமித்ஷா - பீகார் மாடல் எடுபடுமா?
- அவர் முதல்வராக இருந்தபோதுதான் மகளிருக்கு மாதம் ரூ.1500 உள்ளிட்ட ஹிட்டான மக்கள் நலத் திட்டங்கள் வந்தன
- மோடியால் கியூட் சிரிப்பு கொண்டவர் என்று புகழப்பட்ட மக்களை சபாநாயகர் ஓம் பிர்லாவின் ஐஏஎஸ் மகள் திருமணம் டெல்லியில் நடக்கிறது.
மகா. களம்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5 ] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.
பாஜகவின் மகாயுதி கூட்டணியில் முதல்வர் நாற்காலிக்கான குடுமிப்பிடி சண்டை தொடங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆளும் சிவசேனாவை உடைத்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் தாவியதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஷிண்டேவை முதலமைச்சராக்கி பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அங்கிருந்து பாஜகவுக்கு ஜம்ப் அடித்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 காலத்தில் மகா. முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக இருந்தார்.
ஆசையில் பட்னாவிஸ்
இந்நிலையில் தற்போது 132 இடங்களில் தனைப்பரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக பட்னாவிசை முதல்வர் நாற்காலியில் அமர்த்த தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முரண்டு பிடிப்பதால் பாஜக தலைமை தீவிர ஆலோசனையில் மூழ்கியுள்ளது. தேர்தல் வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் பட்னாவிசை முதல்வர் ஆக்க பாஜகவிடம் கராராக கூறியிருக்கிறது. அஜித் பவாரை பொறுத்தவரை அவர் துணை முதல்வர் பதவியோடு திருப்தி அடைந்துள்ளார்.
ஷிண்டேவின் பாயிண்ட்
ஆனால் ஷிண்டே தரப்பு சிவசேனாவோ, தங்கள் தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் மகளிருக்கு மாதம் ரூ.1500 உள்ளிட்ட ஹிட்டான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பதால் மக்கள் மத்தியில் அவரே முதல்வர் முகமாக பதிந்துள்ளார். எனவே அவர் மீண்டும் முதல்வர் ஆவது தான் உஷித்தம் என்று நட்டமாக நிற்கிறது. இன்றுடன் மகா. சட்டமன்ற பதவிக்காலம் காலாவதியாகும் நிலையில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் கூட்டணி தத்தளிக்கிறது.
இந்த சூழலில் மோடியால் கியூட் சிரிப்பு கொண்டவர் என்று புகழப்பட்ட மக்களை சபாநாயகர் ஓம் பிர்லாவின் ஐஏஎஸ் மகள் திருமணம் டெல்லியில் வைத்து நடைபெறுகிறது. எனவே இதை காரணமாக வைத்து பட்னாவிஸ் டெல்லி விரைத்துள்ளார். திருமணத்தில் கலந்துகொள்ளவே தான் டெல்லி வந்ததாக பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த திருமணத்தில் கலந்துகொள்வதாக இருந்த ஷிண்டேவின் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை அமித் ஷா மும்பை வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பணியுமா பாஜக
பீகாரில் பாஜக அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் அங்கு குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவிலும் ஏக்நாத் ஷிண்டே விஷயத்தில் முடிவெடுக்குமா என்றும் பார்க்க வேண்டி உள்ளது. ஷிண்டே சிவசேசன் எம்பி நரேஷ் மாஸ்க்கேவும் பீகாரை சுட்டிக்காட்டி அதை வலியுறுத்தியுள்ளார்.
ஏனெனில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. ஷிண்டே சிவசேனா கட்சிக்கு மக்களவையில் 7 எம்பிக்களும் , மாநிலங்களவையில் 1 எம்பியும் உள்ளனர். எனவே, தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக மகாராஷ்டிராவில் அனுசரித்து செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.