இந்தியா

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே.. ஆட்சி அமைக்க உரிமை கோரும் பட்னாவிஸ்..

Published On 2024-11-26 07:03 GMT   |   Update On 2024-11-26 07:12 GMT
  • மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்
  • ஷிண்டே சிவசேனாவிடம் 57 எம்எல்ஏக்கள் உள்ளனர்

288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.

அடுத்து முதல்வர் யார் என்பதில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றுடன் மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகிறது.

எனவே மகாரஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அம்மாநிலத்தின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் புதிய அமைச்சரவை அமையும் வரை ஏக்நாத் ஷிண்டே ஆட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பன்ஸ் நீடித்து வரும் நிலையில் ஷிண்டேவின் பதவி விலகல் பட்னாவிஸ் - கான பச்சைக் கோடியாக பார்க்கப் படுகிறது.

முன்னதாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 132 இடங்களில் வென்றுள்ளதால் பட்னாவிஸ் முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் பீகாரில் குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட நிதிஷ் குமார் என்டிஏ கூட்டணி முதல்வர் ஆக்கப்பட்டது போல் ஏக்நாத் ஷிண்டேவும் மீண்டும் மகா. முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்று அவர் தரப்பு சிவசேனா வலியுறுத்தியது.

ஆனால் ஷிண்டேவை பாஜக சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்  வெளிப்பாடாகவே, தனது ஆதரவாளர்கள் மும்பையில் கூட வேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

 

தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் ஆளுநரை பட்னாவிஸ் சந்தித்துள்ள நிலையில் விரைவில் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தைனிக் பாஸ்கர் ஊடகத்துக்கு ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி பட்னாவிஸை முதல்வராக்கும் ஒப்பந்தம் பாஜக - ஷிண்டே சிவசேனா இடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஷிண்டே சிவசேனாவிடம் 57 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் கூட்டணியில் உள்ள அஜித் பவரின் என்சிபி யிடம் 41 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News