இந்தியா

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: அசோக் கெலாட் அறிவிப்பு

Published On 2022-09-29 16:35 IST   |   Update On 2022-09-29 16:37:00 IST
  • சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் தனது முடிவை தெரிவித்துள்ளார்.
  • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்குவார் என கூறப்பட்டது.

ஆனால், ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அசோக் கெலாட் இது பற்றி கூறுகையில், "ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியால் நான் வருத்தம் அடைந்தேன். சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு நான் போட்டியிடவில்லை" என்றார். ராஜஸ்தான் முதல் மந்திரியாக நீங்கள் நீடிப்பீர்களா? என்று கேட்டதற்கு 'இதுபற்றி சோனியா காந்தி முடிவு செய்வார்' என்றார் கெலாட்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில், திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் போட்டியிடுகிறார்.  எனவே, இவருக்கும் சசி தரூருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News