இந்தியா

ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: கேரள கால்பந்து வீரர் கைது

Published On 2023-11-21 09:47 GMT   |   Update On 2023-11-21 09:47 GMT
  • விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
  • மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.

பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News