கம்மி சம்பளத்திற்கு 70 மணி நேரம் உழைப்பாங்களா? கியூர்ஃபிட் நிறுவனர் அதிரடி!
- கலந்துரையாடலில் நாராயண மூர்த்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- இவரது கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் இவரது கருத்து சரியானது என்று ஆதரவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கியூர்ஃபிட் நிறுவனர் முகேஷ் பன்சால், நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முகேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில், "முதலில், இது தனிப்பட்ட விருப்பம். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று, குடும்பமும், வேலையும், அமைதியான மனநிலையும் முக்கியமானதாகும். மக்கள் தங்களுக்கு எது முக்கியம் என்பதை முடிவு செய்து, அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்லும் நிறுவனங்கள், அதற்கான விகிதாசாரத்தை உருவாக்க வேண்டும்."
"40 மணி நேரத்திற்கான சம்பளத்தை கொடுத்துவிட்டு, 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. இதில் எந்தவிதமான நியாமும் இல்லை. ஆனால், இளைஞர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில், அதிக நேரம் உழைப்பது பற்றி முடிவு எடுக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.