இந்தியா

சபரிமலையில் பதினெட்டாம் படியேறும் பக்தர்களுக்கு உதவ அனுபவமிக்க போலீசாரை நியமிக்க முடிவு

Published On 2024-11-05 06:30 GMT   |   Update On 2024-11-05 06:30 GMT
  • மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
  • பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல், அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் சரியாக கவனம் செலுத்தாததன் காரணமாக அடிக்கடி நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதுபோன்று இந்த சீசனில் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத் துள்ளது. அதன்படி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனின் போது தினமும் 80 ஆயிரம் பக்தர்களை மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்களுக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் அனுபவம் வாய்ந்தவர்களுடன், முன் அனுபவம் இல்லாத போலீசாரையும் தேர்வு செய்ய முதலில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே சபரிமலையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ள போலீசாரை மட்டும் பக்தர்களை படியேற்றும் பணியில் ஈடுபடுத்த தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பணியாற்றிய போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு பதினெட்டாம் படியில் பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நான்கு ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News