இந்தியா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- சந்திர சேகரராவின் மகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன்

Published On 2023-03-08 06:11 GMT   |   Update On 2023-03-08 06:11 GMT
  • அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
  • அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கிய சவுத் குரூப் இன்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் எம்எல்சி கவிதா சார்பில் அருண் பங்குதாரராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த வருமானம் ரூ.296 கோடியாக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் சில தொகை அருண் ராமச்சந்திர பிள்ளையின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தி இரவில் அவரை கைது செய்தனர்.

நேற்று சிபிஐ அதிகாரிகள் அவரை டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

மேலும் கோர்ட்டு அவரை ஒரு வாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

இந்த விசாரணையின்போது அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

டெல்லி மதுபான வழக்கில் சரத்சந்திர ரெட்டி, மகுண்ட சீனிவாசலு ரெட்டி, மகுண்ட ராகவ், எம்.எல்.சி. கே. அருண் ராமச்சந்திர பிள்ளை, எம்.எல்.சி. கவிதா ஆகியோர் முக்கிய நபர்கள் என தெரிவித்துள்ளனர்.

அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயின்பள்ளி, புச்சிபாபு ஆகியோர் வெளியில் புரோக்கர்களாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மதுபான முறைகேடு வழக்கில் அருணுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கும் இடையே அரசியல் ஒப்பந்தம் ஏற்படுத்த அருண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றி எல்-1 உரிமம் பெற்ற இன்டோ ஸ்பிரிட்சில் அருண் பிள்ளை 32.5 சதவீதமும், பிரேம் ராகுலு 32.5 சதவீதம் மற்றும் இன்டோ ஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெடில் 35 சத பங்குகளை வைத்ததாக கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிதா டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நாளை மறுதினம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News