டெல்லி குடியரசு தின விழா: ராமாயண பாடல்களை பாடும் பெண் துப்புரவு ஊழியர் பங்கேற்பு
- தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.
இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.
ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.
மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.
இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.
சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.