இந்தியா

வாடகை தராத கடைக்கு தீ வைத்த உரிமையாளர்- கருகி பலி

Published On 2023-08-21 11:00 GMT   |   Update On 2023-08-21 11:01 GMT
  • அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.
  • பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார்.

இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல் போடும் கடை நடத்தி வந்தார்.

சரிவர ஷாமியானா பந்தல் வாடகைக்கு செல்லாததால் சீனிவாசலுக்கு போதிய அளவு வருமானம் வரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கடை உரிமையாளருக்கு சீனிவாசலு வாடகை பாக்கி தரவில்லை.

வாடகை பாக்கி வராததால் வரப்பிரசாத்திற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் கடையை தீவைத்து எரிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை சாமியான பந்தல் கடைக்கு வந்த வரப்பிரசாத் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றார்.

பின்னர் கடையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தான் எடுத்துச் சென்று பெட்ரோலை ஷாமியானா பந்தல் மீது ஊற்றினார். அப்போது பெட்ரோல் சிதறி வர பிரசாத் மீது தெரித்தது.

இதை எடுத்து வரப்பிரசாத் தீக்குச்சியை கொளுத்தி ஷாமியானா பந்தல் மீது வீசினார். சாமியான பந்தல் குபீரென தீ பற்றி எரிந்தது.

அப்போது வரப்பிரசாத் மீது பெட்ரோல் பட்டதால் அவரது உடலிலும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.

ஓங்கோல் ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News