பிரசாரம் செய்ய வந்துவிட்டு உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள்... பிரதமரின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
- கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களும் பதில் கருத்துக்களை கூறி பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் கருத்து மோதல், வார்த்தை போருக்கும் பஞ்சம் இல்லை.
அவ்வகையில், காங்கிரஸ் கட்சியினர் தன் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும், தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு கார்கே பேசியது குறித்தும் பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு முறை இரு முறையல்ல 91 முறை அவமதித்துள்ளது என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
தும்கூரு மாவட்டம் துருவகெரே நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசாமல், உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறீர்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றியும் நீங்கள் பிரசார கூட்டங்களில் பேச வேண்டும்.
இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்தது என்று சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த பிரசாரத்தின்போது, நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.