இந்தியா

ஒடிசா சரணாலயத்தில் யானைகளுக்கான உணவகம் திறப்பு

Published On 2024-07-03 05:38 GMT   |   Update On 2024-07-03 05:38 GMT
  • யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த இளம் யானைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • பராமரிக்கப்படும் யானைகளுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படுகிறது.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் வடமேற்கு பகுதியில் சந்தகா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

இது கடந்த 1982-ம் ஆண்டு டிசம்பரில் யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த காப்பகத்தில் தற்போது யானைகளுக்காக ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த இளம் யானைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காடுகளில் மதம் பிடித்த யானைகளை அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் கும்கி யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த காப்பகத்தில் ஜகா, உமா, கார்த்திக், சந்து, மாமா மற்றும் சங்கர் என்ற பெயர் கொண்ட 6 யானைகளை 13 யானை பாகன்கள் மற்றும் உதவி பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள யானைகளுக்காக வனத்துறை அதிகாரிகள் இந்த பிரத்யேக உணவகத்தை திறந்துள்ளனர். இதுகுறித்து தலைமை பாதுகாவலரான சுசந்தா நந்தா கூறியதாவது:-

யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் போது ஊட்டச்சத்து உணவு தேவைப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் யானைகளுக்கு உணவு அளிக்கப்படும்.

ஒவ்வொரு யானைக்கும் அவற்றின் பெயரில் ஒரு சாவடி உள்ளது. யானைகள் தங்களின் சாவடியை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படுகிறது. பின்னர் நடைபயிற்சி, சிறிய அளவிலான உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் வாழைப்பழம், தேங்காய், கேரட், கரும்பு மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகிறது.

மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ஒரு மணி நேரம் யானைகளின் குளியல் நேரம் ஆகும். அதன் பிறகு மதிய உணவாக கோதுமை, தினை, சோளப்பொடி, குதிரை வாலி, மஞ்சள், ஆமணக்கு எண்ணை மற்றும் உப்பு கலந்த வெள்ளம் வழங்கப்படுகிறது. இரவு உணவாக புல், மரக்கிளைகள், வாழைத்தண்டு, வைக்கோல் வழங்கப்படுவதாகவும் இந்த உணவகத்தில் இருந்து சிறிது தூரத்தில் யானைகள் ஓய்வெடுப்பதற்காக கொட்டத்தை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News