போராட்டக்களம் செல்ல பேரிகார்டுகளை உடைத்த விவசாயிகள் - டெல்லியில் என்ன நடந்தது தெரியுமா?
- நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
- வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியில் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க பாரதிய கிசான் யூனியனை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர். விவசாயிகள் வருவதை அறிந்து போலீசார் பேரிகார்டுகளை வைத்திருந்தனர்.
விவசாயிகளை பார்த்ததும், போலீசார் அவர்களிடம் நுழைவு வாயில் வழியே செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், அதிக எண்ணிக்கையில் வந்திருந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் போராட்டக்களத்திற்கு செல்ல முயற்சித்தனர். இதன் காரணமாக சிவ விவசாயிகள் பேரிகார்டுகளை தகர்த்தும், மேலும் சிலர் அதன் மீது ஏறியும் போராட்டக்களத்துக்கு சென்றனர்.
இதன் காரணமாக ஜந்தர் மந்தர் பகுதியில் திடீர் சலசலப்பு நிலவியது. இறுதியில் பேரிகார்டுகளை கடந்து போராட்டக்களம் சென்ற விவசாயிகள் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.