ஜன்னலை சுத்தம் செய்தபோது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
- குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கிழக்கு பெங்களூரு கண்ணமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவரது மனைவி குஷ்பு ஆசிஷ்திரிவேதி (32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்கள் தொட்டபன ஹள்ளி என்ற பகுதியில் உள்ள 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் குஷ்பு ஆசிஷ்திரிவேதி மற்றும் அவரது வீட்டு பணியாளர் ஆகியோர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். வீட்டு பணியாளர் வீட்டுக்குள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மர ரேக் திடீரென வழுக்கி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்த குஷ்பு ஆசிஷ்திரிவேதி 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் மாமியார் குஷ்பு ஆசிஷ்திரிவேதியை மீட்டு சீகேஹள்ளியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குஷ்பு ஆசிஷ்திரிவேதி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 தளங்களில் மொத்தம் 750 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.