இந்தியா

மீனவர்கள் சுருக்குமடி வலை விவகாரம்: தமிழக-மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2024-10-04 07:58 GMT   |   Update On 2024-10-04 07:58 GMT
  • சுருக்கு மடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோவுடன் நடந்து கொள்ளக்கூடாது.
  • சுருக்குமடி வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.

புதுடெல்லி:

தமிழ்நாட்டில் மீன்பிடிக்க சுருக்கு மடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து முந்தைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுருக்கு மடி வலைக்கு மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்க கூடுதல் கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரியும் மீனவர்கள் அமைப்பு சார்பில் புதிய இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபஸ்-எஸ்-ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த சுருக்கு மடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோவுடன் நடந்து கொள்ளக்கூடாது. மீனவர்களின் கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்.

மேலும், சுருக்குமடி வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இருப்பினும் இந்த இடைக்கால மனுவுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு மீதான இறுதி விசாரணையை வருகிற பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News