இந்தியா

மைசூரு சிவராத்திரிஸ்வரர் கோவில் திருவிழாவில் 118 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Published On 2024-02-08 05:40 GMT   |   Update On 2024-02-08 05:40 GMT
  • முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
  • மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சின்கூடு அருகே உள்ள கபிலாநதி கரையில் அமைந்துள்ளது ஸ்ரீசுத்தூர் மடம் ஆதி ஜெகத்குரு சிவராத்திரிஸ்வரர் கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு வார காலம் நடைபெறும். குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு கோவிலில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

இலவச திருமண நிகழ்ச்சி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மணமக்களுக்கு மாங்கல்யம் வழங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் சேலை உள்ளிட்ட பொருட்கள் மணமகள்களுக்கு வழங்கப்பட்டது. மணமகனுக்கு வேட்டி, சட்டை வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளை சேர்ந்த 24 மணமக்கள் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கதாகும். இத்திருமணத்தில் 118 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஒரே அரங்கில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீசுத்தூர் மடம் ஏழை மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்ததன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை கொடுத்துள்ளது. இந்த திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

Similar News