இந்தியா

தாயின் இறுதிச் சடங்குக்காக பிச்சை எடுத்த சிறுமி: கண்கலங்க வைத்த பரிதாபம்

Published On 2024-08-19 06:35 GMT   |   Update On 2024-08-19 06:35 GMT
  • சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது.
  • உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பெல் தரோடாவை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்.

இவரது தாயார் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது. உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமியின் தாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த சிறுமி நிலைகுலைந்து காணப்பட்டார்.

தனக்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாததால் மன வேதனை அடைந்தார். தாயின் இறுதி சடங்குகளை செய்ய பணம் இல்லாததால் தாயின் பிணத்தருகே அழுதபடி உட்கார்ந்து இருந்தார்.

பின்னர் தாயின் இறுதி சடங்கு செய்வதற்காக உதவி செய்யுமாறு கிராம மக்களிடம் கேட்டார்.

தரையில் துண்டை விரித்து விட்டு சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது கண்போரை கண்கலங்க செய்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர்.

இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இதனைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் விரைவில் சிறுமிக்கு நிதி உதவி அளிப்பதாகவும் தற்போது அப்பகுதி கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதி சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறுமியின் தாயின் இறுதிச் சடங்குக்காண அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுதது வருகின்றனர்.

Tags:    

Similar News