இந்தியா

கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கேட்ட பள்ளி மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் கண்டக்டர்

Published On 2023-09-08 09:05 GMT   |   Update On 2023-09-08 09:05 GMT
  • மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார்.
  • சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாணவி தனது வீட்டை அடைந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, மாணவி தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். மாணவியிடம் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தருவதாக கூறி இருக்கிறார்.

ஆனால் கண்டக்டர் சில்லறை பாக்கியை தரவில்லை. இதனால் மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கண்டக்டர், மாணவியை திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.

மேலும் பாக்கி சில்லறையை கொடுக்காமல், அந்த மாணவியை நடுவழியிலேயே பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க செய்தார். மாணவியிடம் வேறு பணம் இல்லாததால், வேறு பஸ்சில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அவர், கண்ணீர் வடிந்தபடியே தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தனது வீட்டை அடைந்தார். தன்னிடம் அரசு பஸ் கண்டக்டர் நடந்த விதம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போவுக்கு சென்று, மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டரை சந்தித்து தட்டிக்கேட்டார். அப்போது மாணவியின் தந்தையையும் அந்த கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News