ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "அனுமன்" அவர்களை அழைத்து வருவார்: மத்திய மந்திரி
- எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- சீதாராம் யெச்சூரி 22-ந்தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவிப்பு.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகியுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதனைப் படைத்தவர்கள், விருது பெற்றவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சில தலைவர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா ஆதாயம் பார்க்க நினைக்கிறது என விமர்சனம் செய்வதுதான்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் "பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. ராமர் பக்தர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.
எல்லோரும் 22-ந்தேதி அயோத்தி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உத்தர பிரதேச மாநிலம் அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும். சிலர் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களை அனுமன் அழைத்து வருவார்.
இவ்வாறு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜனதா ராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், அவரது கட்சி தொண்டர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜனதா நடத்தில் நிகழ்ச்சியில் யார் கலந்த கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜனதாவின் நிகழ்ச்சி. பா.ஜனதாவின் பேரணி. பா.ஜனதா நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாங்கள் அயோத்தி செல்வோம் என்றார்.
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அயோத்தி செல்வேன். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதைவிட, யோசிக்க ஒன்றுமில்லை என்றார்.