கேரளாவில் கனமழை- நிலச்சரிவு: இரவு நேர பயணத்துக்கு தடை
- கேரளாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 39 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோட்டயத்தில் 838.7, வயநாட்டில் 266.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக கோட்டயம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.
இரண்டரை மணி நேரத்தில், இடுக்கியில் உடும்பன்னூரில் 167 மி.மீட்டர் மழையும், கோழிக்கோடு உறுமியில் 132 மி.மீட்டர் மழையும் பெய்ததாக பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து வரும் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா புளியன்மலையில் மாநில நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடுபுழா-கட்டப்பனா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள நாடு காணி பகுதியில் நிறுததப்பட்டிருந்த 2 கார்கள் மீது மண் சரிவுகள் விழுந்ததால் அந்த கார்கள் சேதம் அடைந்தன. மழையின் காரணமாக மூலமட்டம் பகுதியில் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் மலங்கரை அணையின் 4 ஷட்டர்களும் இன்று தலா 2 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மூவாட்டுப்புழா, தொடுபுழா,மீனச்சில் மற்றும் மணிமாலா ஆறு களில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. எனவே பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உளளன. பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே இரவுநேர பயணத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சூறாவளி சுழற்சி காரணமாக கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும். இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், தெற்கு கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் கர்நாடாக கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.
இதற்கிடையில் கேரளாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 39 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயத்தில் 838.7, வயநாட்டில் 266.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. மொத்தத்தில் கேரளாவில் 500.7 மி.மீட்டர் கோடை மழை பெய்துள்ளது.