"நானே மனைவி மரணத்திற்கு காரணம்" - தன் மீதே FIR பதிவு செய்து கொண்ட கணவர்
- தோஷியும், அமிதாவும் காரில் அம்பாஜி கோவிலுக்கு சென்று திரும்பினர்
- காயங்களுடன் காரிலிருந்து வெளியேற முடியாமல் அமிதா சிக்கி கொண்டார்
குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பரேஷ் தோஷி. இவரது மனைவி அமிதா.
பரேஷ் தோஷி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் தோஷி, தனது மனைவி அமிதாவுடன், காரில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
திரும்பி வரும் வழியில், சபர்காந்தா பகுதியில், தான் மஹுதி கிராமத்தில் கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அவர்கள் காரின் குறுக்கே ஒரு நாய் வந்தது.
அந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க தோஷி காரை திருப்பிய போது, அது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தூண்கள் மற்றும் சாலை தடுப்புகளிலும் மோதியது.
அப்போது சாலை தடுப்புகளில் ஒன்று அவர்களது கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அமிதாவை தாக்கியது. இதில் காரிலிருந்து இறங்க முடியாமல், பலத்த காயங்களுடன் அமிதா சிக்கித் தவித்தார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், விபத்தை கண்டு உதவ ஓடி வந்தனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே அமிதாவை வெளியே மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அமிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற தோஷி, கவனக்குறைவாக கார் ஓட்டிய குற்றத்தை புரிந்ததாக தனது பெயரிலேயே முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து கொண்டார்.
ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களால், பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், காலையில் நடைபயிற்சி செய்வதும் கடினமாகி வருவதாக, கடந்த வருடம், அம்மாநில உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.