காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தால் பதவி பறிக்கப்படும்- காங்கிரஸ் எச்சரிக்கை
- வேட்பாளர் நிகில் குமாரசாமி பிரசாரத்தின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
- 2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மனுத்தாக்கல் கடந்த 25-ந் தேதி நிறைவடைந்தது.
இதில் சென்னபட்டணாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் நிகில் குமாரசாமி, சிக்காவியில் பா.ஜனதா சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா துகாராம், பா.ஜனதா சார்பில் பங்காரு ஹனுமந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா, ஜே.டி.எஸ். ஆகிய 3 அரசியல் கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
குறிப்பாக ஆளும் கட்சியான காங்கிரஸின் 3 தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெறும் பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் படுதோல்வி அடைந்தால் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சன்னபட்டனா தாலுகா கண்ணமங்களா கிராமத்தில் நேற்று பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரணும், முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் மகனுமான வேட்பாளர் நிகில் குமாரசாமி தனது பேச்சின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்? என தெரியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.