இந்தியா-சீனா ஒப்பந்தம்: கிழக்கு லடாக் எல்லையில் பாதுகாப்பு கூடாரங்கள் அகற்றம்
- இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ளது.
- கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவ வீரர்களை குவித்து வந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.
இருநாட்டுக்கும் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படாததால் எல்.ஏ.சி. எனப் படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவ வீரர் களும் அவரவர் பகுதியில் ரோந்து சென்று வந்தனர்.
இருநாட்டினரும் தொடர்ந்து ராணுவ வீரர்களை நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் குவித்ததால் அங்கு எப்போது வேண்டு மானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர்.
அப்போது எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன் படி இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
சீன ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது. இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.
அந்த பகுதியில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.