மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: பாகிஸ்தானை வலியுறுத்திய இந்தியா
- பாகிஸ்தானின் பகவல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியானது.
- மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2001-ல் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல், 2019-ல் ஜம்மு-காஷ்மீரில் நடத்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் பின்னால் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என நீண்ட காலமாக மறுத்து வருகின்றனர். மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையென்றால், இது பாகிஸ்தானின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும்.
இந்தியா மீதான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.