ஐதராபாத்தில் உள்ள சொகுசு விடுதியில் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு
- 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.
இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.