கரண்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவு ; தோல்வியை தழுவிய அமைச்சர்
- கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார்
- பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் நவம்பர் 25ம் தேதி மற்றும் டிசம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜன.5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜன.5 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானது.
அதனைத்தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.