கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க 80 ஆயிரம் போலீசார் குவிப்பு
- பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்புக்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், 1,900 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 10 மணியளவில் பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், கர்நாடக முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்படுகிறது. பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டு இருக்கும். பெங்களூருவில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது.
முழு அடைப்புக்கு கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருப்பதால், இன்று தியேட்டர்கள் திறக்கப்படாது என்றும், எந்த விதமான சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட உள்ளது. நகைக்கடைகளும் மூடப்படுகின்றன. பெங்களூருவில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படாது.
நடைபாதை வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து, நடைபாதை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரெயில்கள் மட்டும் பெங்களூருவில் எப்போதும் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளதால், இன்று அரசு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் முழு அடைப்பின் நிலைமையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க 80 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.