இந்தியா

கர்நாடகா இடைத்தேர்தல்: கட்சியில் சேர்ந்த மறுநாள் பா.ஜ.க. தலைவருக்கு சீட் வழங்கிய காங்கிரஸ்

Published On 2024-10-24 03:31 GMT   |   Update On 2024-10-24 03:31 GMT
  • சன்னபட்னா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • குமாரசாமி கட்சிக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தி.

கர்நாடகாவில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் யோகேஷ்வரா. இவர் பா.ஜ.க. கட்சியில் இருந்து கர்நாடக மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.

நேற்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி சன்னபட்னா தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அவர் தற்போது மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மந்திரியாக உள்ளதால் சன்னபட்டாவிற்கு அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், சன்னபட்னா காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வரா நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து யோகேஷ்வரா கூறுகையில் "காங்கிரஸ் கட்சிக்கு தன்னை இழுத்ததற்காக டி.கே. சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியுடன்தான் தொடங்கினேன். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.-வில் இணைந்தேன். தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தேன். பா.ஜ.க.- ஜேடிஎஸ் கூட்டணிக்குப் பிறகு என்னுடைய அரசியல் முன்னேற்றத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

யோகேஷ்வரா சன்னபட்னா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர். என்.டி.ஏ. கூட்டணியில் குமராசாமி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால் யோகேஷ்வரா விரக்தி அடைந்தார். தனக்கு இந்த தொகுதியை கூட்டணி கட்சிகள் விட்டுத்தர வேண்டும். இல்லையெனில் சுயேட்சையாக போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இந்த தொகுதியை யோகேஷ்வராவிற்கு விட்டுக்கொடுக்க என்னிடம வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், காங்கிரஸ் அவரை வரவேற்க தயாராக இருந்தது என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News