பட்ஜெட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மீது போலீசில் புகார்
- மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன்.
- மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சிவக்குமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வட இந்தியாவுக்கு திருப்பி விடுவதால் தென் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மீது புகார் செய்தனர். அதில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக சத்தியபிரமாணம் செய்துள்ள எம்.பி. பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இதற்கிடையே பெங்களூரு பன்னார்கட்டாவில் காவிரி குழாய் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.கே.சுரேஷ் கூறியதாவது:-
மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன். மத்திய அரசின் பாரபட்சமான கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்பி உள்ளன. மத்திய அரசிடம் மாற்றான் தாய் மனப்பான்மையை கைவிட சொன்னேனே தவிர நாடு பிரிவினை பற்றி பேசவில்லை.
மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கன்னடர்களின் குரலாக இதை பேசினேன். ஆனால் எனது அறிக்கை நாட்டை பிரிப்பது போல் திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வரிப்பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரூ.50ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. மாநில வருமானத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது. வரி வருவாயில் 337 சதவீதம் உத்தர பிரதேசத்திற்கும், 430 சதவீதம் பீகார் மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த அநீதியை சரிசெய்து சட்டப்படி அரசுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கன்னடர்களின் சுய மரியாதைக்காக சிறை செல்லவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.