இந்தியா

மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடக அரசு திட்டவட்டம்

Published On 2024-03-22 03:55 GMT   |   Update On 2024-03-22 03:55 GMT
  • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது.
  • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன்.

பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. நேற்று முன்தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதை தடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசையும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வையும் இலக்காக கொண்டு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தி.மு.க.வுக்கும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் "பலவீனமான முதல்-மந்திரி நமது முதல்-மந்திரி, நமது காவிரி நமது உரிமை" என்ற பெயரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது. அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இது, சித்தராமையா அரசு மு.க.ஸ்டாலினுடன் ரகசிய உறவு வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பேரம் பேசி நமது காவிரி நீரை கூடுதலாக பெறும். மேகதாது திட்டத்தையும் தடுத்து நிறுத்தும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன். அவர்கள் (தமிழ்நாடு) தங்களின் மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நீதி கிடைக்கும். மேகதாது திட்டத்தால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடும் பயன் அடையும். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களை சேர்ந்த மக்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். அதனால் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பேசும் நல்ல காலம் வரும். மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News