குடும்பத்தினரால் கடத்தல்: லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு- கேரள ஐகோர்ட் உத்தரவு
- வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
- அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளத்திற்கு சென்று லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இருவரும் கொளஞ்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.
அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக தங்கி இருந்தனர். இது அபீபாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் அங்குச் சென்று அபீபாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபீபாவை அவரது பெற்றோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமையா மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அபீபா, சுமையாவுடன் உறவில் இருந்த போதிலும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து சுமையாவின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் பெஞ்ச் முடித்து வைத்தது. மேலும் லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.