தெலுங்கானாவில் தொண்டையில் முட்டை சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
- நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா கூலித் தொழிலாளி.
- 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் திருப்பதையா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பைய பள்ளியில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக பைக்கில் சென்று கொண்டு இருந்தார். பாதி வழியில் சென்றபோது திருப்பதையாவுக்கு பசி எடுத்ததால் பைக்கை நிறுத்தினார். பைக்கில் கொண்டு சென்ற வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டார்.
அப்போது ஒரு முட்டை அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறினார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பதையாவின் பிணத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.