இந்தியா

கர்நாடகாவில் 11 அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-07-11 04:25 GMT   |   Update On 2024-07-11 04:25 GMT
  • சோதனையில் 100 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • அதிகாரிகளுடைய வீடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் லோக் ஆயுத்தா போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஊழல் செய்து சொத்து சேர்த்த அதிகாரிகள் யார்? யார்? என கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த லோக் ஆயுத்தா காவல் துறை கோர்ட்டில் அவர்கள் வீடுகளில் சோதனை நடத்த வாரண்ட் பெற்று நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அதன்படி இன்று காலை 9 மாவட்டங்களில் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 100 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் சோதனை நடைபெற்று வரும் அதிகாரிகளுடைய வீடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. கோலார் தாசில்தார் விஜயண்ணா, சிறுபாசன துறையின் ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர் ரவீந்திரப்பா, நீர்வளத்துறை மைசூர் கண்காணிப்பு என்ஜினீயர் மகேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஜெகதீஷ், தார்வாட் கட்டுமான மையத்தின் திட்ட இயக்குநர் சேகர் கவுடா, ஊரக குடிநீர் வழங்கல் துறையின் ஓய்வு பெற்ற நிர்வாக என்ஜினீயர் சிவராஜ், பிபிஎம்பி கெங்கேரி மண்டல வருவாய் அலுவலர் பசவராஜா மாகி, தாவாங்கரே செயல் என்ஜினீயர் உமேஷ், உதவி என்ஜினீயர் மகாதேவ் பென்னூர், கிராம பஞ்சாயத்து கிரேடு-1, செயலாளர் ஹாசன், என்.எம். ஜெகதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஹரியூர் தாலுகாவில் உள்ள அப்பார்ட்மெண்ட், சித்ரதுர்கா, பரங்கி மானே, ஜமங்கல், சூகுரு பண்ணை இல்லம், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரப்பா பாட்டிலிங் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையால் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News