இந்தியா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: குற்றச்சாட்டுகள் கூறிய காங்கிரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதில்

Published On 2024-12-25 08:12 GMT   |   Update On 2024-12-25 08:12 GMT
  • மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தோ்தல் நடைபெற்றது.
  • மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

புதுடெல்லி:

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது இக் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

மேலும், தோ்தலுக்கு முன்பாக மாநில வாக்காளா் பட்டியலில் புதிதாக வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். பலா் நீக்கப்பட்டனா் என்றும் அக்கட்சிகள் குற்றம் சாட்டின.

காங்கிரஸ் கட்சி சாா்பில் இது தொடர்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தோ்தலின்போது, மாலை 5 மணி முதல் இரவு 11.45 மணி வரையில் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பது குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது சாதாரணமாக நடை பெறக்கூடிய ஒன்றுதான். வாக்காளா் எண்ணிக்கையை திரட்டும் தோ்தல் ஆணைய நடவடிக்கைகளின் ஓா் அங்கம்தான் இது.

அதே நேரம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப் பட்ட முகவா்களிடம், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய '17சி' என்ற சட்டப்பூா்வ படிவம் வழங்கப்பட்டுவிடும். எனவே, உண்மையான வாக்காளா் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமற்றது.

அதுபோல, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியானது வெளிப்படைத் தன்மை யுடன், உரிய சட்ட நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சோ்ப்பு மற்றும் நீக்கம் செய்தலில் எந்தவித தன்னிச்சையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனா்.

எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்ற 47 தொகுதிகள் உள்பட 50 தொகுதிகளில் கடந்த ஜூலை முதல் நவம்பா் வரை சராசரியாக 50,000 வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ள புகாா் தவறானது.

அந்த கால கட்டத்தில் வெறும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டனா். எனவே, 47 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி பெற்ற வெற்றியின் மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்.

அதுபோல, வாக்காளா் பட்டியலில் இருந்து வழக்கத்துக்கு மாறான வாக்காளா் நீக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. இறப்பு, முகவரி மாற்றம் காரணமாக இரு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் சராசரியாக தொகுதிக்கு 2,779 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். வாக்காளா் நீக்கம் செய்யும் பணியிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இடம் பெற்றனா்.

இவ்வாறு தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News