இந்தியா

நவம்பர் 2-வது வாரம் சட்டமன்ற தேர்தல் இருக்கலாம்: மகாராஷ்டிரா மாநில முதல்வர் சொல்கிறார்

Published On 2024-09-16 05:17 GMT   |   Update On 2024-09-16 05:17 GMT
  • இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது நல்லதாக இருக்கும்.
  • மஹாயுதி கூட்டணியில் 8 முதல் 10 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும்.

ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அதிக அளவில் பாதுகாப்புப்பணி தேவைப்படுவதால் மகாராஷ்டிரா மாநில தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நவம்பர் 2-வது வாரம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

நவம்பர் 2-வது வாரத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது நல்லதாக இருக்கும். மஹாயுதி கூட்டணியில் மெரிட் மற்றும் சிறந்த ஸ்டிரைக் ரேட் தொகுதி பங்கீட்டிற்கு வரையறையாக இருக்கும். இன்னும் 8 முதல் 10 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.

வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தியுள்ளோம். திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். இந்த இலக்கு 10 லட்சம் இளைஞர்கள் என்பதாகும். லட்கி பாகின் திட்டத்தின் கீழ் 1.6 கோடி பெண்கள் நிதியுதவி பெறுகிறார்கள். 2.6 கோடி பெண்கள் என்பதுதான் எங்கள் இலக்கு.

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மஹாயுதி பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஆகும்.

Tags:    

Similar News