ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது
- தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
- தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் கோபி. இவர் ஜார்க்கண்ட் விடுதலை புலிகள் என்ற அமைப்பை தொடங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அந்த இயக்கம் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அமைப்பு மூலம் தொழில் அதிபர்களை மிரட்டி கோடி கணக்கில் அவர் சம்பாதித்து வந்தார். அவர் மீது ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களில் 102 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தினேஷ் கோபி பீகார் மாநில எல்லை அருகே நேபாளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு அவர் சீக்கியர் போன்று தன்னை மாற்றிக் கொண்டு ஓட்டல் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.