null
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவம்
- இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- ராணுவத்தின் கடுமையான பதிலடியால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர்.
ரஜோரி:
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக தோடோ மாவட்டத்தில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு, கதுவா பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் பலி என அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, அங்கு பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பிடிக்க மாநில போலீசாருடன் ராணுவ படையும் களமிறங்கி உள்ளது. சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 500 பேர் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. உடனே ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ராணுவத்தின் கடுமையான பதிலடியால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர். இதனால் அங்கு நடைபெற இருந்த பயங்கரதாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.