ம.பி.யில் 11 வயது சிறுமியை சீரழித்து உடல்முழுவதும் கடித்து காயப்படுத்திய கொடூரம்
- நேற்றுமுன்தினம் சிறுமி காணாமல் போனார்
- காட்டுப்பகுதியில் சிறுமி படுகாயத்துடன் மீட்கப்பட்டார்
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அர்காண்டி டவுன்ஷிப். இந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென்று மாயமாகியுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
சிறுமி மாயமானது குறித்து போலீசில் தகவல் தெரிவித்ததுடன், தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்றுமாலை அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் அந்த சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், உடல் முழுவதும் கடிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சொட்டசொட்ட படுகாயத்துடன் காணப்பட்டுள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அவர் வசித்த இடத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வந்தவர்.
இந்த விசயம் காட்டுத்தீயாக பரவ, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ''மைஹாரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றேன். எனது இதயம் வலியால் நிறைந்துள்ளன. பெரும் மனஉளைச்சல் அடைகிறேன். போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு முறையாக உயர் சிகிச்சை வழங்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.