பக்தர்களிடம் நகை, பணம் திருட்டு: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது
- அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர்.
- நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ள இடங்களில் கூட்டல் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் பக்தர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடி வருகின்றனர்.
திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விமலா குமாரி டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
வாலிபர்கள் தமிழகத்தில் நெய்வேலியை சேர்ந்த வேலு, ராஜேந்திரன் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 65 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தன.
நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.