கர்நாடகாவில் அனல் பறக்கும் வெப்ப காற்றால் 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
- தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
- மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் தற்போது வரலாறு காணாத வகையில் அனல் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. கர்நாடகாவில் குடகு மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடி வருகிறது.
இதனால் தற்போது பகல் நேரங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்தையே ரத்து செய்து விட்டனர். கொளுத்தும் வெப்பம் காரணமாக வட கர்நாடகாவில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாகல் கோட் மற்றும் சித்ரதுர்காவில் தலா 50 பேர் வெப்ப பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கலபுரகியல் 39 பேரும், ராய்ச்சூரில் 38 பேரும், யாத்கிரியில் 35 பேரும், பெல்காம் பகுதியில் 32 பேரும் தட்சிண கன்னடாவில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் காற்று வீசுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உஷ்ண பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி தண்ணீர் குடியுங்கள், வெப்பநிலை அதிகரிப்பால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பல்வேறு உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.