தென்மேற்கு பருவமழை தீவிரம்: மழைக்கு வீடு இடிந்து தாய்-2 குழந்தைகள் பலி
- தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளின் சுவர்கள் ஈரப்பதமாக காணப்படுகிறது. ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா காரடகி அருகே உள்ள மாதப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி (35) என்பவர் தனது குழந்தைகள் அமுல்யா முத்தப்பா ஹரகுனி (2), அனுஸ்ரீ முத்தப்பா ஹரகுனி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அவர்களது வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டு இருந்த அவர்கள் மீது விழுந்தது.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் 2 குழந்தைகளும் பரிதாமாக இறந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டனர்.