ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
- மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
- ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார்.
புதுடெல்லி:
திரிபுரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திரிபுரா கவர்னராக இந்திரசேனா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்துக்கு ரகுபத் தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இந்திர சேனா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக அவர் இருந்து வந்தார்.
தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி செயலாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.
மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார். 68 வயதாகும் அவர் பா.ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவரை தேசிய அரசியலில் இருந்து கவர்னர் பதவிக்கு பா.ஜனதா மாற்றி உள்ளது.
புதிய கவர்னர்கள் இருவரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.