கடனை அடைத்த 30 நாட்களில் சொத்துப்பத்திரம் தராவிட்டால்.... வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. புதிய உத்தரவு
- சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
- கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.
மும்பை:
வங்கிகளில் கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோரிடம் சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது, கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது, அடமானப் பத்திரத்தை ரத்து செய்வது ஆகியவற்றுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக காலம் எடுத்துக்கொள்வதாக புகாா்கள் தொடா்கின்றன.
இந்நிலையில், இது தொடா்பாக ஆர்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளா் ஒருவா் கடனை முழுமையாக அடைத்த 30 நாட்களுக்குள் அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
இதைச் செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளா் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவா் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும். இது தொடா்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.
கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும்.
எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்து போவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.