ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவல்
- சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
- வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.