இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி: சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2023-06-06 02:17 GMT   |   Update On 2023-06-06 02:17 GMT
  • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தினர் அதிக அளவில் பாதிப்பு
  • ரெயில்வே அதிகாரிகள் பேசிய உரையாடல் கசிந்ததாக குற்றச்சாட்டு

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினார்.

ஒரு ரெயில் மேற்கு வங்காளத்தில் இருந்து புறப்பட்டது. மற்றொரு ரெயில் அங்கு சென்றது. இதனால் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ரெயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்மட்ட குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்கு மேற்கு வங்காள அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி என மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி. வேறு மாநிலத்தில் விபத்து நடந்திருக்கும்போது, நேற்றிலிருந்து அவர்கள் ஏன் அதிக அளவில் பீதி அடைந்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்?. போலீஸ் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகளின் ஒட்டுக் கேட்டுள்ளனர். இரண்டு அதிகாரிகளின் போன் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது. எப்படி உரையாடல் கசிந்தது. இது சிபிஐ விசாரணையில் வரவேண்டும். இது வரவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்வேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News