பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு- நாற்காலியில் சரிந்தபடி உயிரைவிட்ட வங்கி மேலாளர்
- சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
- திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.
பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.