இந்தியா

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் பிரச்சனையை பேசாத பிரதமர்: காங்கிரஸ் தாக்கு

Published On 2024-06-30 10:34 GMT   |   Update On 2024-06-30 10:34 GMT
  • பிரதமர் மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
  • அப்போது பேசிய அவர், எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன் என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன் என்றார்.

இந்நிலையில், மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் பற்றி மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது:

மத்திய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை புத்திசாலித்தனமாக ஏதாவது சொல்வார் என நினைத்தோம்.

நீட் தேர்வு பற்றியோ, ரெயில்வே விபத்து பற்றியோ, தினசரி உள்கட்டமைப்பு சரிவுகள் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை.

டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் பேசவில்லை.

மக்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சனையையும் பிரதமர் பேசவில்லை. நிகழ்ச்சி நிரலை மாற்றுவதே அவரது முறை.

எல்லோரும் நீட் மோசடிகள் பற்றி பேசுவதால், கவனத்தைத் திசைதிருப்ப நீங்கள் கேரளாவிலிருந்து குடை பற்றி பேசுகிறீர்கள்.

தேர்தலின் போது தெற்கிற்கு எதிராக வடக்கே போட்டியிட்டீர்கள். மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா?

பிரச்சாரத்தின் போது நீங்கள் சொல்வது உண்மை, இப்போது நீங்கள் செய்வது பிரசாரம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News