அனைவரும் தாயின் பெயரில் மரக்கன்று நட வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
- இந்தியாவின் பல தயாரிப்புகள் உலகம் முழுவதும் பெரும் தேவையுடன் உள்ளன.
- டோக்கியோவில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அவர் கடைசியாக பிப்ரவரி 25-ந்தேதி மன் கி பாத்தில் பேசி இருந்தார். அதன்பின் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் உரையாற்றவில்லை.
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று பிப்ரவரியில் சொன்னேன், இன்று மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியுடன் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியதற்காக நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2024 மக்களவைத் தேர்தல் உலகின் மிகப்பெரிய தேர்தல். 65 கோடி மக்கள் வாக்களித்தனர். உலகின் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடைமுறையில் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த மாதம் இந்த நேரத்தில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி இருக்கும். ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். டோக்கியோவில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து, நமது விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு முழு மனதுடன் தயாராகி வருகின்றனர். வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்க சீயர்4பாரத் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் பல தயாரிப்புகள் உலகம் முழுவதும் பெரும் தேவையுடன் உள்ளன. அத்தகைய தயாரிப்புகளில் ஒன்று அரக்கு காபி. ஆந்திராவின் அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் அரக்கு காபி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதன் வளமான சுவை மற்றும் நறுமணத்திற்காக பிரபலமாக உள்ளது.
சுமார் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியுடன் தொடர்புடையவை. ஒரு முறை விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இந்த காபியை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நினைவிருக்கிறது. அரக்கு காபி பல உலகளாவிய விருதுகளைப் பெற்று உள்ளது. டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டி லும் இந்த காபி பிரபலமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.